எண்ணங்களே
Korea Tamil Sangam

அப்பாவின் மாட்டைத் திருடியவர்

பிட்சைமுத்து சுதாகர்



வடகொரியாவில் விவசாய குடும்பத்தில் பிறந்து, இனி இந்த பொழப்பு நமக்கு சரிப்பட்டு வராது என அப்பாவின் ஒரு மாட்டை திருடி விற்று அதன் மூலம் ரயில் டிக்கட் எடுத்து சியோல் நகருக்கு வந்த ஒருவர் தான் இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு நிறுவனத்தை கட்டியமைத்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா.

அவர் வேறு யாருமல்ல. உலகின் முன்னோடி வாகன உற்பத்தி நிறுவனமான‌ Hyundai நிறுவனத்தின் நிறுவனர் சங் சூ யுங் (Chung Ju-yung).


Korea Tamil Sangam


1948 கொரிய போருக்கு பின் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபெற்ற தென்கொரியாவின் தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

நவீன தென்கொரியாவின் தந்தை என இன்றும் இவரை மக்கள் போற்ற காரணம் தென் கொரிய தேசத்தின் வளர்ச்சிக்கான இவரது தொலைநோக்கு பார்வை மற்றும் அவரது பங்களிப்பு.

வெறும் பணத்தை மட்டுமே சம்பாதிக்காமல் தான் சார்ந்திருக்கும் இன எழுச்சிக்காக சிந்தித்த பல தலைவர்கள் சென்ற தலைமுறையில் இருந்ததால்தான் உலகம் முழுவதும் இன்று பல இனக் குழுக்கள் நவீன வசதிகளோடு வாழ்கிறது.

தன் தொழில் நிறுவனங்களில் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியைக் கொண்டு அசான் அறக்கட்டளையினை (Asan Foundation) நிறுவி அதன் வாயிலாக மருத்துவம், பொறியியல், என பல துறைகளில் நிதி உதவி அளித்து தென் கொரியாவின் இளம் சமூகத்தை கட்டியமைத்தவர் சங் சூ யுங்.

இன்றைக்கு தென்கொரியாவில் உள்ள பல முன்னோடி மருத்துவர்களை நாற்பது வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவிற்கு அனுப்பி அங்குள்ள பல நுட்பங்களை தென்கொரியாவிற்கு கொண்டு வந்தவர். இன்றைக்கும் இவரது Asan அறக்கட்டளையால் தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் மிகப்பெரிய மருத்துவமனைகள் மக்கள் சேவையிலும், மருத்துவ உயர் ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த மருத்துவமனைகளில் ஒன்றான சியோல் "அசான் மருத்துவமனை" (Asan Hospital) அருகே ஒராண்டு காலம் வசித்தேன். அந்த கால கட்டத்தில்தான் இவரைப் பற்றி அதிகம் வாசிக்க தொடங்கினேன்.

பலகோடி மக்கள் வாழும் இந்தியா இன்றைக்கு வரை ஒலிம்பிக் போட்டி நடத்த திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்பு பரப்பளவில் தமிழக அளவே உள்ள தென்கொரியா சாதித்துக் காட்ட மிக முக்கியமான்வர் சங் சூ யுங்.

அந்த கால கட்டத்தில் கொண்டு வரப்பட்டதுதான் சியோல் சுரங்க ரயில் சேவை (Seoul Metro). இன்றைக்கு சியோல் நகருக்கு சென்றால் இதன் உட்கட்டமைப்பு பிரம்மாண்டம் உங்களை வாயைப் பிளக்க வைக்கும்.

சங் சூ யுங், வட கொரியாவில் பிறந்ததால் இறுதி வரை வடகொரியா, தென் கொரியாவிற்கிடையே சமதானப் புறாவாக பறந்தார். இதற்காக, தென்கொரியாவின் Demilitarized Zone (DMZ) போர் ஒப்பந்த பகுதியில் வடகொரிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் 100 மில்லியன் டாலர் செலவில் தொழில்துறை வளாகத்தை அமைக்க ஏற்பாடு செய்தவர்.

இன்னும் இவரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம்.

தன் தந்தையிடம் திருடிய அந்த ஒரு மாட்டிற்கு நன்றி சொல்லும் வகையில் வடகொரியாவிற்கு 1998 ஆம் ஆண்டு "1001" மாடுகளை அன்பளிப்பாக வட கொரியாவிற்கு அனுப்பி சமாதானத்திற்கான உலகின் பார்வையை தென் கொரியாவின் பக்கம் திரும்ப வைத்தவர்.

இன்றைக்கு அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரது நெடுநாள் கனவாகிய வட கொரியா தென் கொரிய சமாதானம் 2018 ஆம் ஆண்டு சாத்தியமாகியுள்ளது.

தன் இன வளர்ச்சிக்காக அரும்பணியாற்றிய‌ சங் யூ யங்கை 1992 ஆம் ஆண்டு தென் கொரிய அதிபர் தேர்தலில் மக்கள் அவரை கதற கதற தோற்கடித்தனர். ஆனால் மனிதர் இறுதிக்காலம் வரை சலிக்காமல் தன் சொந்த மக்களுக்காக பணியாற்றினார்.

தமிழகத்தில் நேற்று பெய்த மழையில் முளைத்த அரசியல் காளான்க‌ள் "மக்களை கட்டிவைத்து அடிக்க வேண்டும்" என்று சொல்லுபவர்களுக்கு சங் சூ யங்கின் வரலாற்றை வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

இந்தப் பதிவில் நான் சொல்ல விரும்புவது இரண்டு விசயங்கள்.

ஒன்று, விவசாயத்தில் இருந்து வெளியேறி சங் யூ யங் போல தேசத்தையே கட்டமைக்கும் அளவிற்கு சாதித்து காட்டியவர்கள் பலர் உள்ளனர்.

இரண்டாவது, சொந்த மக்களே அதிகாரத்தை தராவிட்டாலும் தொடர்ந்து உழைப்பதன் மூலமே அவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்க முடியும். 

Korea Tamil Sangam
© 2019 ~ 2020 koreatamilsangam.com
All Rights Reserved Terms of Use and Privacy Policy